வியாழன், 18 டிசம்பர், 2014

3.வறுமை நீங்கி செல்வம் பெற பாட வேண்டிய பாடல்கள்

 
வறுமை நீங்கி செல்வம் பெற பாட வேண்டிய பாடல்
  சுந்தரர் தேவாரம் 

“நம்பி” என்ற திருப்பதிகம் 

திருச்சிற்றம்பலம் 

1.மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி, 
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி, 
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால் 
எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

2.திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால் சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம் 
அம் கண் நம்பி; அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி; குமரன் முதல்-தேவர்- 
தங்கள் நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; “தாதை” என்று உன் சரண் பணிந்து ஏத்தும் 
எங்கள் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

3.வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம் 
அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம் 
புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி 
இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

4.ஊறும் நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம், 
கூறும் நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும் 
சீறும் நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும் 
ஏறும் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

5.“குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை, குலைத்த நம்பி, சிலையா வரை கையில் 
பற்றும் நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி” எனப் பாடுதல் அல்லால் 
மற்று நம்பி! உனக்கு என் செய வல்லேன்? மதியிலேன் படு வெந்துயர் எல்லாம் 
எற்றும் நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

6.அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள் 
தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம் 
தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை 
இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

7.பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா 
உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்? 
முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது 
என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

8.சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி; 
வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார் 
அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற, 
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

9.“காண்டும், நம்பி கழல் சேவடி” என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை 
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத் 
தீண்டும் நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி 
ஈண்டும் நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

10.கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை; கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் 
பெருக்கும் நம்பி; பெருகக் கருத்தா.. .

திருச்சிற்றம்பலம் 

2.வறுமை நீங்கி செல்வம் பெற பாடவேண்டிய பதிகப் பாடல்கள்

 
வறுமை நீங்கவும் பொன் பொருள் சேரவும் பாட  வேண்டிய சுந்தரர் பதிகம் 

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தேவாரப் பாடல் 

திருவோணகாந்தன்தளி


திருச்சிற்றம்பலம் 

1.நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; 
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; 
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, 
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

2.திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் 
கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; 
அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கொற்று அடியாளால்; 
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .

3.பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் 
“மற்று ஓர் பற்று இலர்” என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; 
அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை 
ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .

4.வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று 
இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? 
பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு 
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

5.கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, 
ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; 
தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; 
ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! .

6.வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, 
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் 
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!

7.பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; 
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; 
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓரீர்; 
உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!

8.வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, 
சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால், 
கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- 
உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!

9.வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? 
ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; 
தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உம்தம் 
ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!

10.ஓவணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் 
ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, 
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன 
பா வணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.

திருச்சிற்றம்பலம் 



1.வறுமை நீங்கி செல்வம் பெற பாட வேண்டிய பதிகப் பாடல்கள் (ஞானசம்பந்தர் பாடல் )

 
வறுமை  நீங்கி செல்வம் பெற  பாட வேண்டிய பதிகப் பாடல்
(கடன் நீங்கி போதிய பொருளாதாரம் பெற்று வாழ வேண்டிய அதி அற்புதப்பதிகம்)

திருஆவடுதுறை 
திருஞான சம்பந்தர் பாடல் 
திருச்சிற்றம்பலம் 

1.இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!  

2.வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 

3.நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்!
புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்து,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 

4.தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

5.கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

6.வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

7.வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!  

8.பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                                இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!   

9.உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;கண்ணனும், கடி
கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                               இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

10.பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன் உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு 
                                              இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

11.அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.  

திருச்சிற்றம்பலம் 

வியாழன், 4 டிசம்பர், 2014

மன மகிழ்ச்சியை கொடுக்கும் நின்ற திருத்தாண்டகம்

உ 
மன மகிழ்ச்சியை கொடுக்கும் நின்ற திருத்தாண்டகம் 
நின்ற திருத் தாண்டகம் 
(வட மொழி வேதத்தின் இருதயமாக விளங்கும் "ஸ்ரீருத்ரம்" - திருநாவுக்கரசரால் 6 ம் திருமுறையில் "நின்ற திருத்தாண்டகம்" ஆக அருளியுள்ளார் .  இதன் சிறப்பினை சேக்கிழார் மறைப்பயன் ஆகிய "ருத்ரம்"எனச் சிறப்பித்துள்ளார்.  சிவபெருமானின் விஸ்வ ரூபத்தையும்  பேராற்றலையும் விவரித்து விளக்கி வணக்கம் கூறுவதே ஸ்ரீ ருத்ரம் ஆகும்..
நின்ற திருத் தாண்டகம் - ஸ்ரீருத்ரசாரம்" எனப் போற்றப் படுகிறது.

            சிவலிங்க மூர்த்திக்கு பிரதோஷ வேளையில் அபிஷேகம் நிகழும் போது நின்ற திருத்தாண்டகத்தை   
 மனமுருகி ஓதுவதால் மனதில்  மகிழ்ச்சியும் இன்பமும் பெருகும்.

அன்பர்கள் அனுதினமும் மற்றும் குறிப்பாக பிரதோஷ வேளையில் நின்ற திருத் தாண்டகம் படித்து  இறைவன் அருளுக்கு பாத்தியமவோமாக!!!!!



திருச்சிற்றம்பலம் 

நின்ற திருத்தாண்டகம்

1.இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும்
                                         காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய்,
                                   அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்
                                   உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை
                                  அடிகள் நின்ற ஆறே!.

2.மண் ஆகி, விண் ஆகி, மலையும் ஆகி, வயிரமும் ஆய்,
                            மாணிக்கம் தானே ஆகி,
கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி, கலை ஆகி,
                          கலை ஞானம் தானே ஆகி,
பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி, பிரளயத்துக்கு
                         அப்பால் ஓர் அண்டம் ஆகி,
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி, எழும் சுடர்
                      ஆய் எம் அடிகள் நின்ற ஆறே!.


3.கல் ஆகி, களறு ஆகி, கானும் ஆகி, காவிரி ஆய், கால் ஆறு
                                    ஆய், கழியும் ஆகி,
புல் ஆகி, புதல் ஆகி, பூடும் ஆகி, புரம் ஆகி, புரம் மூன்றும்
                                      கெடுத்தான் ஆகி,
சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி, சுலாவு ஆகி,
                              சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,
நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் ஆகி, நெடுஞ்சுடர் ஆய்
                          நிமிர்ந்து, அடிகள் நின்ற ஆறே!.

4.தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு
                                    ஓர் தெய்வம் ஆகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும்
                                     தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள்
                               நுகர்வானும் தானே ஆகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,
                          நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.
5.காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு
                      ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி, 
கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை
      கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய், 
நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள்
                               விசும்பின் உச்சி ஆகி, 
ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
                      ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

6.அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் ஆகி, அருமறையோடு
                              ஐம்பூதம் தானே ஆகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே ஆகி, பால் மதியோடு
                          ஆதி ஆய், பான்மை ஆகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி,
                           மலை ஆகி, கழியும் ஆகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
                      ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.


7.மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும்
                                        தானே ஆகி, 
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக்
                                       குழகன் ஆகி, 
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு
                              அறுக்கும் புனிதன் ஆகி, 
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி, அழல் வண்ண
                            வண்ணர் தாம் நின்ற ஆறே!.

8.ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி,
                          அழல் ஆகி, அவியும் ஆகி,
நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி, நாதனாய்,
                         வேதத்தின் உள்ளோன் ஆகி,
பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி, பூக்குளால்
                          வாசம் ஆய் நின்றான் ஆகி,
தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர்
                   ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.


9.நீர் ஆகி, நீள் அகலம் தானே ஆகி, நிழல் ஆகி, நீள்
                           விசும்பின் உச்சி ஆகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி, பெரு
            மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம்
             ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய்,
                    சென்று அடிகள் நின்ற ஆறே!.


10.மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம்
              ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி, 
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி,
                           பரலோகம் தானே ஆகி, 
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய்,
                             புராணன் தானே ஆகி, 
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம்
                             அடிகள் நின்ற ஆறே!.

திருச்சிற்றம்பலம் 
உரை





























திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...