திங்கள், 25 மார்ச், 2019

III திருக்கைலாய காட்சி காண 3வது பாடல்

திருக்கைலாய காட்சி காண 3வது  பாடல் 

திருஞானசம்பந்தர் அருளிய கைலாய காட்சி பாடல் 

திருக்கயிலாயம் - தக்கேசி 



திருச்சிற்றம்பலம் 

1.பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.
   
2.புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்; 
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த 
கரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே.
   
3.மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும்
தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.
   
4.முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன்
தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார்
மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு
கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.
   
5.ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார்,
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி,
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.
   
6.தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப்
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்த
காது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே.
   
7.தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்;
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்;
கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக்
கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே.
   
8.ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம்
ண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி,
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.
   
9.விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர்,
பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்,
எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே.
   
10.போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்,
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல், 
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.

   திருச்சிற்றம்பலம் 

II திருக்கைலாய காட்சி காண

திருக்கைலாய காட்சி காண (2 வது பாடல்)

அப்பர் பெருமான் அருளிய தேவாரம் 

திருக்கயிலாயம் 
போற்றித் திருத்தாண்டகம்



திருச்சிற்றம்பலம் 

1.வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
     மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி! 
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
                 ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி! 
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
       ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி! 
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
             கயிலை மலையானே, போற்றி போற்றி!.
 
2.பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி! பிறவி
                    அறுக்கும் பிரானே, போற்றி! 
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி! மருவி
                 என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
         போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.
 
3.மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! மருவி
                 என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள்
               ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி! 
திரு ஆகி நின்ற திறமே, போற்றி! தேசம்
                       பரவப்படுவாய், போற்றி! 
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி! கயிலை
                  மலையானே, போற்றி போற்றி!.
 
4.வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து
             என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி! 
ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி! ஓங்கி
               அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி! 
தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி!
        தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி! 
கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.
5.ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி! ஓங்கி
             அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி! 
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
      பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி! நேர்வார்
               ஒருவரையும் இல்லாய், போற்றி! 
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி! கயிலை
                மலையானே, போற்றி போற்றி!.
 
6.சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி!
               தேவர் அறியாத தேவே, போற்றி! 
புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி!
        போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி!
               பற்றி உலகை விடாதாய், போற்றி! 
கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி! கயிலை
                  மலையானே, போற்றி போற்றி!.
7.பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி!
          பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி! 
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி!
           என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி! 
விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி!
     மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி! 
கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.
8.இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்
              சிந்தை நீங்கா இறைவா, போற்றி! 
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
             ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி! 
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
           ஆதி புராணனாய் நின்றாய், போற்றி! 
கமை ஆகி நின்ற கனலே, போற்றி! கயிலை
                மலையானே, போற்றி போற்றி!.
9.மூவாய், பிறவாய், இறவாய், போற்றி! முன்னமே
                  தோன்றி முளைத்தாய், போற்றி! 
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
           சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி! 
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி! அல்லல்
                      நலிய அலந்தேன், போற்றி! 
காவாய்! கனகத்திரளே, போற்றி! கயிலை
                   மலையானே, போற்றி போற்றி!.
 
10.நெடிய விசும்போடு கண்ணே, போற்றி! நீள
                 அகலம் உடையாய், போற்றி! 
அடியும் முடியும் இகலி, போற்றி! அங்கு ஒன்று
                அறியாமை நின்றாய், போற்றி! 
கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி!
    கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி! 
கடிய உருமொடு மின்னே, போற்றி! கயிலை
                மலையானே, போற்றி போற்றி!.
 
11.உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி!
          ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி! 
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி!
    இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி! 
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி!
        பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி! 
கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!
          கயிலை மலையானே, போற்றி போற்றி!.

திருச்சிற்றம்பலம் 
 

I திருக்கைலாய காட்சி (ஈசன் அம்பாள் நாம் இருக்கும் இடத்திலேயே காண )

திருக்கைலாய காட்சி (ஈசன்,அம்பாள் நாம் இருக்கும் இடத்திலேயே திருக்கைலாய காட்சியை  காண )

அப்பர் பெருமான் அருளிய தேவாரம் 

திருஐயாறு 



திருச்சிற்றம்பலம் 

1.மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.
 
2.போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
 
3.எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
 
4.பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!
 
5.ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
 
6.தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
7.கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
 
8.விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
 
9.முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
10.திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
“எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
 
11.வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

   திருச்சிற்றம்பலம் 

ஞாயிறு, 24 மார்ச், 2019

ராகு,கேது தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் நீங்க பாட வேண்டிய சம்பந்தர் பதிகம்

ராகு,கேது தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் நீங்க பாட வேண்டிய சம்பந்தர் பதிகம் 

திருக்காளத்தி

திருச்சிற்றம்பலம் 

1.சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.     
 
2.ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம்,
சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே,
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி,
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!     

3.கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர்
மூங்கில், வந்து அணைதரு முகலியின் கரையினில்,
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ,
வீங்கு வெந்துயர் கெடும்; வீடு எளிது ஆகுமே.     

4.கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே.      

5.வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே,
திரை தரு முகலியின் கரையினில், தேமலர்
விரை தரு சடை முடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினைமினே!      
 
6.முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும்,
எத்து மா முகலியின் கரையினில், எழில் பெற,
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன் தன் காளத்தி அணைவது கருமமே.      
 
7.மண்ணும், மா வேங்கையும், மருதுகள், பீழ்ந்து உந்தி
நண்ணு மா முகலியின் கரையினில், நன்மை சேர்
வண்ண மா மலரவன், மால் அவன், காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே!     
 
8.வீங்கிய உடலினர், விரிதரு துவர் உடைப்
பாங்கு இலார், சொலை விடும்! பரன் அடி பணியுமின்!
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர,
வாங்கிடும், வினைகளை, வானவர்க்கு ஒருவனே.      

9.அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி
வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்-
சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.      
திருச்சிற்றம்பலம் 
 

வாகனம் வாங்கவும்,செல்வம் பெருகவும் பாட வேண்டிய திருப்புகழ்

வாகனம் வாங்கவும்,செல்வம் பெருகவும்   பாட வேண்டிய திருப்புகழ் 

கொங்கணகிரி




ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றி வளர்
     அந்திபகல் அற்ற நினைவு ...... அருள்வாயே.

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்திஉனை
     அன்பொடு துதிக்க மனம் ...... அருள்வாயே.

தங்கிய தவத்து உணர்வு தந்துடிமை முத்திபெற
     சந்திர வெளிக்கு வழி ...... அருள்வாயே.

தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்கவளர்
     சம்ப்ரம விதத்துடனெ ...... அருள்வாயே.

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம்
     உன்தனை நினைத்து அமைய ...... அருள்வாயே.

மண்டலிகர் ராப்பகலும் வந்து சுப ரட்சை புரி
     வந்து அணைய புத்தியினை ...... அருள்வாயே.

கொங்கில் உயிர் பெற்று வளர் தென்கரையில் அப்பர் அருள்
     கொண்டு, உடல் உற்ற பொருள் ...... அருள்வாயே.

குஞ்சர முகற்கு இளைய கந்தன்என, வெற்றிபெறு
     கொங்கண கிரிக்குள் வளர் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

திருப்புகழைப் பாடி முக்தி அடைய பாட வேண்டிய பாடல்

திருப்புகழைப் பாடி முக்தி அடைய பாட வேண்டிய பாடல் 
  இரத்னகிரி
"காலம் அறிவான் கருணை புரிவான் ரத்தினகிரியான்" 




பத்தியால் யான் உனைப் ...... பலகாலும்
     பற்றியே, மா திருப் ...... புகழ் பாடி,

முத்தன் ஆமாறுனைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற்கு ...... அருள்வாயே.

உத்தம அது ஆன சற் ...... குணர் நேயா!
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா!

வித்தகா! ஞானசத் ...... தி நிபாதா!
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"

திங்கள், 11 மார்ச், 2019

சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இடர் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய பதிகம் (ஆண், பெண் இரு பாலருக்கும்)

சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இடர் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய பதிகம் (ஆண், பெண் இரு பாலருக்கும்)

 திருமருகல்
திருஞானசம்பந்தர் தேவாரம் 

திருச்சிற்றம்பலம் 

1.சடையாய் எனும் ஆல்சரண் நீ எனும் ஆல்; விடையாய் எனும் ஆல்வெருவா விழும் ஆல்; மடை ஆர் குவளை மலரும் மருகல்
 உடையாய்தகுமோ இவள் உள் மெலிவே?

2.சிந்தாய் எனும் ஆல்சிவனே எனும் ஆல்; முந்தாய் எனும் ஆல்முதல்வா எனும் ஆல்; கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
 எந்தாய்தகுமோ இவள் ஏசறவே?

3.அறை ஆர் கழலும் அழல்-வாய் அரவும்
 பிறை ஆர் சடையும் உடையாய்பெரிய
 மறையார் மருகல் மகிழ்வாய்இவளை
 இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே.

4.ஒலி-நீர் சடையில் கரந்தாய்உலகம்
 பலி நீ திரிவாய்பழி இல் புகழாய்; மலி-நீர் மருகல் மகிழ்வாய்இவளை
 மெலி-நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.

5.துணி நீல-வண்ணம் முகில் தோன்றியன்ன
 மணி நீல-கண்டம் உடையாய்மருகல்
 கணி நீல-வண்டு ஆர் குழலாள் இவள்-தன்
 அணி நீல ஒண்-கண் அயர்வு ஆக்கினையே.

6.பலரும் பரவப் படுவாய்சடைமேல்
 மலரும் பிறை ஒன்று உடையாய்மருகல்
 புலரும் தனையும் துயிலாள்புடை-போந்து
 அலரும் படுமோ அடியாள் இவளே?

7.வழுவாள் "பெருமான் கழல் வாழ்கஎனா
 எழுவாள்நினைவாள் இரவும் பகலும்; மழுவாள் உடையாய்மருகல் பெருமான்; தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.


8.இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
 துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
 வலங்கொள்மதில் சூழ் மருகல் பெருமான்; அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.

9.எரி ஆர் சடையும் அடியும் இருவர்
 தெரியாதது ஒர் தீத்-திரள் ஆயவனே; மரியார் பிரியா மருகல் பெருமான்; அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.


10.அறிவு இல் சமணும் அலர்-சாக்கியரும்
 நெறி அல்லன செய்தனர்நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்மருகல் பெருமான்; நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே.

11.வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
 உயர்-ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
 இயல்-ஞான-சம்பந்தன பாடல் வல்லார்
 வியன்-ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.

திருச்சிற்றம்பலம் 

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...