ஞாயிறு, 30 ஜூன், 2019

அருணகிரிநாதரின் - வேல் விருத்தம் - வழிக்குத்துணையாக அனைத்து இடத்திற்கும் பாதுகாப்பாக நம்மை கொண்டு செல்ல உதவும் விருத்தம்

அருணகிரிநாதரின் - வேல் விருத்தம் - வழிக்குத்துணையாக அனைத்து  இடத்திற்கும் பாதுகாப்பாக நம்மை கொண்டு செல்ல உதவும் விருத்தம் 





குறிப்பு : (வேலனே வேல், வேலே வேலன்: வேற்பூசையே குகன் பூசையாகும் - வேல்அலங்காரம்
வேல் - ஞானம் - ஞானமே வேல்: கிருபானந்த வாரியார்.
அறிவே உருவானது கந்தன் திருவடி.
அறிவை அறியச் செய்யும் அறிவின் உருவானது: வேல்.
அறிவு ஆழமாக இருக்கும் - பரந்து விரிந்து விளங்கும் - கூர்மையாகத் திகழும்.
வேலும் அப்படியே, வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது.
வேலின்இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது.
வேலின்நுனிப்பகுதி கூர்மையாகத் திகழ்கிறது.

அறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேலாகிய திருவருட்சக்தியாகும். வேல் கொன்டு சூரனை சூரசம்ஹாரம் செய்தார் முருகன். வேல் அழிக்ககூடிய ஆயுதம்மட்டுமல்ல. அது யாவற்றையும் அளிக்கக்கூடிய திருவருட்சக்தி. அறிவை அறியச் செய்யும் அறிவாய் உள்ள திருவருளின் உருவமே பராசக்தி. பராசக்தியே வேல்வடிவமாகக் குமரன் மேவியிருப்பதாயிற்று.)
எனவே நாம் அனைவரும் இந்த வேல் விருத்தத்தைப் பாராயணம் செய்து முருகன் அருள் பெறுவோம்......

"வேலும் மயிலும் சேவலும் துணை "

1.மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி
   மதியும்இர வியுமலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
   மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்

சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
   செநெல்களொடு தரளம் இடவே

செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
   திடர்அடைய நுகரும் வடிவேல்

தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி
   தருகவுளும் உறுவள் எயிறுந்

தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
   தருதுணைவன் அமரர்குயிலுங்

குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
   குயமொடமர் புரியுமுருகன்

குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
   குலையவிடு கொடியவேலே.

2.வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
   வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
   வெல்லா எனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
   சதுர்முகனும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
   தனிஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
   கெளமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
   கெளரிகா மாஷிசைவ

சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
   த்ரியம்பகி அளித்த செல்வச்

சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
   செம்பொற் றிருக்கை வேலே.

3.வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
   வெகுளுறு பசாசகணமும்

வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
   வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
   அடக்கிய தடக்கிரியெலாம்

அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
   அருந்திப் புரந்தவைவேல்

தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
   தனிப்பரங் குன்றேரகம்

தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
   தடங்கடல் இலங்கைஅதனிற்

போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
   புகழும்அவ ரவர்நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
   புங்கவன் செங்கை வேலே.

4.அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
   அங்கியும் உடன்சுழலவே

அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
   அகிலதல முஞ்சுழலவே

மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கியணியும்

மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
   சந்தமுட னும்பிறைகள்போல்

தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
   தன்புறம் வருஞ்சமனையான்

கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
   கஞ்சம்உத வுங்கருணைவேள்

கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே.

5.ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
   ஆதவனின் வெம்மைஒளிமீ

தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
   றமைந்தன்ப ருக்கு முற்றா

மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
   முடித்திந்தி ரர்க்கு மெட்டா

முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
   மூதண்ட மும்புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
   மின்பணைக ளுமிழு முத்தும்

இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
   இலவங்க நறவமாருந்

தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
   தருவநிதை மகிழ்நன் ஐயன்

தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
   சரவணக் குமரன் வேலே.

6.பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
   பாடலினொ டாடலின்எலாம்

பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
   பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
   சசிமங்கை அனையர்தாமுந்

தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
   தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
   மந்த்ரஉப தேச நல்கும்

வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
   வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
   குவளையுஞ் செங்காந்தளுங்

கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
   கோலத் திருக்கைவேலே.

7.அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
   அநந்தமா யினுமேவினால்

அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
   அறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
   கடியகொலை புரியு மதுசெங்

கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
   கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
   தானவாந் தகன்மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
   தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
   மங்கையும் பதம்வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
   வாகைத் திருக்கை வேலே.

8.மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
   வலியதா னவர்மார்பிடம்

வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
   மகவான் தனைச்சி றைவிடுத்

தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
   உம்பர்சொற் றுதிபெற்றுநா

உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
   ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்

சோமகல சப்ரபா லங்கார தரஜடா
   சூடிகா லாந்தகாலர்

துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
   துரககே சரமாம்பரச்

சேமவட வாம்புயப் பரணசங் காபரண
   திகம்பர த்ரியம்பகமகா

தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
   செம்பொற் றிருக்கை வேலே.

9.தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
   செங்கரனை யமுதம் வாய்கொள்

செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து
   சேவடி பிடித்ததெனவும்

நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும்
   நீயெமைக் காக்க எனவும்

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
   நிகழ்கின்ற துங்கநெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
   றடலெரிக் கொடிய உக்ர

அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
   கரசினைத் தனியெடுத்தே

சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
   றாய்திமித் துடனடிக்குஞ்

சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
   சண்முகன் தன்கை வேலே.

10.
வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
   மாலறியு நாலு மறைநூல்

வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
   மநோலய உலாசம் உறவே

உலாவரு கலோலம கராலய சலங்களும்
   உலோகநிலை நீர்நிலையிலா

வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
   உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
   னாசின சிலாத ணிவிலா

சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
   சேவக சராப முகிலாம்

விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
   மேவிய விலாச அகலன்

விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
   வேழம்இளை ஞன்கை வேலே.

"வேலும் மயிலும் சேவலும் துணை "

வெள்ளி, 28 ஜூன், 2019

அருணகிரிநாதரின் - மயில் விருத்தம்(அனைத்து சகல யோகமும் பெற பாட வேண்டிய விருத்தம் )

அனைத்து சகல யோகமும் பெற பாட வேண்டிய விருத்தம் 

திரு அருணகிரிநாதரின் - மயில் விருத்தம்


குறிப்பு :(முருகப் பெருமானின் வாகனமான மயிலின் அழகும் ஆற்றலும் மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியது மயில் விருத்தம் ஆகும்.

முருகனின் வாகனம். பிரணவத்தின் தோற்றம். ''ஓம்'' மயில் தோகைவிரித்தாடும்போது உள்ள தோற்றம். உயிர்கள் அறிவை அறிய அநூகூலமாக உள்ள திருவருளின் வடிவாகும். விந்துசக்தியின் உருவே. உயரில் "யான், எனது" என்எம் திரிபு மறைந்திருப்பதால், பரம்பொருளாகிய முருகன் ஒவ்வொரு உள்ளத்திலும் அறியாதபடி மறைந்து தங்கி இருக்கிறார் (கள்ளனே இறைவன்). உயிரின் நல்வினை தீவினைக் கேற்ப உயிரை இயக்குகிறார். இந்த மறைந்திருக்கின்ற சக்தியே மயில் அல்லது திரோதன சக்தியாகும். பக்குவமடைந்தபின் இந்தத் திரை விலகும். திருவருட்சக்தி விளங்கும். ஞானப் பழம் பெற மயிலேறி உலகவலம் வந்தார். சிறுவாபுரியில் மரகத மயில். மயில் விருத்தம் பாடப் பெற்ற பெருமை.)

மேலும் அருணகிரிநாதர் தம் இறுதிப் பாடலில் எல்லா நாள்களிலும் ஒப்பற்ற சுனையில், இந்திரநீலம் என்ற நீலோர் பல மலர் விளங்குகின்ற திருத்தணி மலையில் வாழ்கின்ற, எங்கள் தலைவரும், இமையவர்களின் தலைவரு மாகிய முருகப்பெருமான் ஏறிவருகின்ற ஒப்பற்ற நம் தலைவனாகிய மயிலை, பலநாட்களாக திருவடியைப் போற்றிப் புகழ்கின்ற அருணகிரிநாதன் சொன்ன மிக இனிமையான அழகிய, பாடல்களாக விளங்குகின்ற, குற்றமில்லாத விருத்தங்கள் ஓருபத்தையும் பாராயணம் புரிபவர்கள், ஆதியான வேதநூல் தன்னிடத்தே நிலை பெற்ற, பிரமஎடைய நான்கு முகங்களையும் பெறுவர், அன்ன வாகனத்தின் மீது ஏறப்பெறுவர் கலைமகளைத் தழுவப் பெறுவர், ஜராவதம் என்ற யானையும் (இந்திரப்பதம்) பெறுவர் மகர மீன்களையுடைய கடலை இடமாகப்பெறுவர் (வருணபதம் பெறுவர்), கருட வாகனத்தில் ஏறுகின்ற வரம் பெறுவர்.அமுதத்தை உணவாகப் பெறுவர் பின்எம், ஆயிரம் பிறை தொழுகின்ற சதாபிசேகம் பெறுவர் செல்வங்கள் பெறுவர் புகழ் பெறுவர் அழியாத முக்தி நலமும் பெறுவார்கள் என்று அவரே உறுதி படக் கூறுகிறார்.

எனவே நாம் அனைவரும் இந்த  மயில் விருத்தத்தை அனுதினமும்  படித்து முருகப்பெருமான் மற்றும் மயிலின்   அருளை எளிதில் பெற்று இனிதே வாழ்வோம்.

"வேலும் மயிலும் சேவலும் துணை "

1.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா

சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.


2.சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
   பட்டுக் ரவுஞ்ச சயிலந்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
   தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
   சித்ரப் பதம்பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
   திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
   பத்மப் பதங் கமழ்தரும்

பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
   பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
   கந்தச்சுவாமி தணிகைக்

கல்லார கிரியுருக வருகிரண மரகத
   கலாபத்தில் இலகு மயிலே.

3.ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
   தண்டமுக டதுபெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
   கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
   மிக்கப் ரியப்படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
   விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
   மகீதரி கிராத குலிமா

மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
   வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
   பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
   பசுந்தோகை வாகை மயிலே.


4.யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
   உதித்ததென் றயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
   லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
   விசும்பிற் பறக்க விரிநீர்

வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
   வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
   கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
   நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
   முகிலுலவு நீலகிரிவாழ்

முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
   மூரிக் கலாப மயிலே.

5.சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
   நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
   சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
   யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
   அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
   நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
   நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
   மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
   வரமுதவு வாகை மயிலே.

6.சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
   சகல லோகமு நடுங்கச்

சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
   சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
   காரம் பிறந்திட நெடுங்

ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
   கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
   சித்ரப் பயோ தரகிரித்

தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
   திருத்தணிமகீரதன் இருங்

கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
   க்ருபாகரன் கார்த்தி கேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
   கிழிபட நடாவு மயிலே.

7.தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
   செகதலமு நின்று சுழலத்

திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
   தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
   பதைபதைத் தேநடுங்கப்

படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
   பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
   அமிர்தகல சக்கொங் கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
   மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
   குருதரு திருத்தணி கைவேள்

கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
   குடிபுகுத நடவு மயிலே.

8.செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
   சிந்தப் புராரி யமிர்தந்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
   தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
   சங்கார கோர நயனத்

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
   சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
   விருத்தன் திருத்த ணிகைவாழ்

வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
   வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
   சுவாமிவா கனமா னதோர்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
   துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

9.சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
   கிரியெனவும் ஆயிரமுகத்

தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
   திங்கள்சங் கெனவும்ப்ரபா

நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
   நின்றமா முகில் என்னவே

நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
   நீலக் கலாப மயிலாம்

அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
   அடியவர்கள் மிடிய கலவே

அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
   அலங்கற் குழாம் அசையவே

மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
   வல்லவுணர் மனம்அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
   வையாளி யேறு மயிலே.

10.நிராசத விராசத வரோதய பராபர
   னிராகுல னிராமய பிரா

னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
   நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
   குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய
   குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
   புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
   லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
   சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
   ஷடாநநன் நடாவு மயிலே.

11.எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
   திலங்கிய திருத்த ணிகைவாழ்

எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
   நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
   பகர்ந்தஅதி மதுர சித்ரப்

பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
   படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
   வாணிதழு வப்பெ றுவரால்

மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
   வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
   அமுதா சனம்பெ றுவர்மேல்

ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
   அழியா வரம்பெ றுவரே.

"வேலும் மயிலும் சேவலும் துணை "

புதன், 26 ஜூன், 2019

2.பேச்சு வராத குழந்தைகள் பேசவும், ஊமை,திக்குவாய் போன்றவை நீங்கி நன்றாக பேசவும்,பேச்சாற்றல் பெருக்கவும் பாட வேண்டிய பதிகம்

2.பேச்சு வராத குழந்தைகள் பேசவும், ஊமை,திக்குவாய் போன்றவை நீங்கி நன்றாக பேசவும்,பேச்சாற்றல் பெருக்கவும் பாட வேண்டிய சம்பந்தர் பதிகம்

திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் 
இறைவன்:சப்தபுரீசுவரர், தாளபுரீஸ்வரர்
இறைவி:ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்
   


குறிப்பு : (சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். )

திருக்கோலக்கா - தக்கராகம் 

 திருச்சிற்றம்பலம் 

1.மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?
   
2.பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.
   
3.பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.
   
4.தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!
   
5.மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.
   
6.வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!
   
7.நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.
   
8.எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
   
9.நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!
   
10.பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

11.நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.
   
திருச்சிற்றம்பலம் 

1.பேச்சு வராத குழந்தைகள் பேசவும், ஊமை,திக்குவாய் போன்றவை நீங்கி நன்றாக பேசவும்,பேச்சாற்றல் பெருக்கவும் பாட வேண்டிய பதிகம்

1.பேச்சு வராத குழந்தைகள் பேசவும், ஊமை,திக்குவாய் போன்றவை நீங்கி நன்றாக பேசவும்,பேச்சாற்றல் பெருக்கவும் பாட வேண்டிய பதிகம் 

மாணிக்கவாசகர் அருளிய பதிகம் 

திருச்சாழல் 

திருச்சிற்றம்பலம் 
 
1.பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!
2.என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!
 
3.கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!
 
4.அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை,
வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்,
சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!
 
5.தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ!
தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு
எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!
 
6.அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய்,
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ!
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம்
சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!
 
7.மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!
 
8.கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!
 
9.தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!
 
10.தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ!
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்,
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!
 
11.நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து,
கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ!
கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!
 
12.கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி;
ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ!
ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!
 
13.மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!
 
14.தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

15.கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!

16.நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!
 
17.அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
`எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!
 
18.சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ்
அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!
 
19.அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!
 
20.அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!

திருச்சிற்றம்பலம் 
 

திங்கள், 24 ஜூன், 2019

மழை வளம் பெறுவதற்கு பாட வேண்டிய பதிகம்

மழை வளம் பெறுவதற்கு பாட வேண்டிய  பதிகம் 

திருஞானசம்பந்தர் 

திருச்சிற்றம்பலம் 

  திருஐயாறு - மேகராகக்குறிஞ்சி 

1.புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு,
                                                             ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான்
                                                             அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று
                                                             அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.
   
2.விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன்
                                                             பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி, "அம் சொலீர், பலி!" என்னும்
                                                             அடிகள் கோயில்
கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும்
                                                             திரு ஐயாறே.
   
3.கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு
                                                  உலர்த்தி, கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.
   
4.ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார்,
                                                             உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும்
                                                             கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.
   
5.நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த
                                                             கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும்
                                                             கோயில் 
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ்
                                                             தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.
   
6.வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும்
                                                             விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும்
                                                             கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
"தேம்தாம்" என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும்
                                                             திரு ஐயாறே.
   
7.நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும்
                                                             நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும்
                                                             கோயில்
குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம்
                                                             மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.
   
8.அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்,
மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த
                                                             மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு
                                                             ஓடி,
செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.
   
9.மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து,
                                                             மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில்
                                                             நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.
   
10.குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று
                                                             இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும்
                                                             கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும்
                                                             திரு ஐயாறே.
   
11.அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை,
                                                             அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி
                                                             ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார்,
                                                             தாழாது அன்றே!
   திருச்சிற்றம்பலம் 
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் தீரவும், தீராத வியாதிகள் (கேன்சர் போன்ற) 
நூற்பொருள் விளங்கவும், பாட வேண்டிய பதிகம் 

குறிப்பு : (பள்ளி,கல்லூரி,மாணவர்களுக்கு மற்றும் அறிவியல்,மருந்து சார் படிப்புகளில் பாடம் பொருள் விளங்கி நல்ல நிலை மதிப்பெண் பெற பாட வேண்டிய அதி அற்புத பதிகம்)

திருஞானசம்பந்தர் 

 திருந்துதேவன்குடி - கொல்லி

திருச்சிற்றம்பலம் 

1.மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே   
 
2.வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;
ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய
ஆதி அந்தம்(ம்) இலா அடிகள், வேடங்களே   
 
3.மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன
தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே   
 
4.செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன;
கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே   
 
5.விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;
மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு
அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே   
 
6.பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா,
புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே   
 
7.கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு
உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே   
 
8.உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே   
 
9.துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;
விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே   
 
10.செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள்
உரு மருவப்படாத் தொழும்பர்தம் உரை கொளேல்!
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்கு
அருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!   
 
11.சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.   

திருச்சிற்றம்பலம் 
 

வெள்ளி, 21 ஜூன், 2019

சோம்பல் நீக்கி சுறுசுறுப்பு பெறவும்,எதிரிகள் என்பதே இல்லாத வாழ்வு பெறவும், பாட வேண்டிய அப்பர் பதிகம்

சோம்பல் நீக்கி சுறுசுறுப்பு பெறவும்,எதிரிகள் என்பதே இல்லாத வாழ்வு பெறவும், பாட வேண்டிய அப்பர்  பதிகம் 

குறிப்பு :( இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் இறைவனைப் பூசித்த தலம்.
எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். 

தேவர்களின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும் தாரகாசுரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ, மண்ணுலகில் இத்தலத்தின் மலை மீது இருக்கும் சிவனை பூக்கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், அசுரனின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கூறினார். 

இதையடுத்து தேவர்கள் அனைவரும் அசுரனுக்கு பயந்து, சிறிய உருவான எறும்பாக வடிவெடுத்து இத்தலத்திற்கு வந்தனர். மேலும் எறும்பு வடிவத்திலேயே, சிவனது சிரம் மீது ஏறி பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டனர். எறும்பு வடிவில் இருந்த தேவர்களுக்கு அருள்செய்ய நினைத்த சிவபெருமான், எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக வழுவழுப்பான தனது லிங்க உருவத்தை சொரசொரப்பாக மாற்றிக்கொண்டாராம்.

எறும்புகளின் வழிபாட்டில் மகிழ்வுற்ற எம்பெருமான் அசுரனை அழித்து, தேவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். எறும்புகள் வழிபட்டதன் காரணமாக இத்தல இறைவனுக்கு ‘எறும்பீசர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இன்றும் சிவ பூஜை நடக்கும் நேரத்தில் கருவறையில் எறும்புகள் ஊர்ந்து செல்லுவதைக் காணலாம். தேவர்கள் வந்து தினமும் எறும்பு வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது.ஆகையினால் எதிரிகளும் அடங்கி போவார்கள்.)


திருநாவுக்கரசர் அருளிய பதிகம் 
திருஎறும்பியூர் 
திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

1.விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே! 
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;- 
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை 
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

2.பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க் 
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்- 
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும் 
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

3.மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை; 
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்- 
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் 
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

4.நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை; 
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா, 
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன் 
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

5.நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும் 
துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான் 
உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும் 
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

6.கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்; 
திறம்பி ஊர்வன மற்றும் பல உள; 
குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை 
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

7.மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும் 
திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே! 
புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை 
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

8.இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு, 
துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான் 
அன்பனே, அரனே! என்று அரற்றுவார்க்கு 
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

9.கண் நிறைந்த கன பவளத்திரள்; 
விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்; 
உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன் 
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.

10.நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும், 
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட, 
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் 
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

திருச்சிற்றம்பலம் 

எம பயம் நீக்கி சிவகதி அளிக்கும் அப்பர் பதிகம்

எம பயம் நீக்கி சிவகதி அளிக்கும் அப்பர் பதிகம் 

திருநாவுக்கரசர் அருளிய 
காலபாசத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

1.கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் 
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், 
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- 
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

2.நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக் 
கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக் 
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை 
இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!

3.கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் 
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் 
ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை 
நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!

4.சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன், 
சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி 
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய், 
போற்றி! என்று உரைப்பார் புடை போகலே!

5.இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்! 
பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர், 
நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும் 
நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!

6.வாமதேவன் வள நகர் வைகலும், 
காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு 
தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும், 
ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!

7.படையும் பாசமும் பற்றிய கையினீர்! 
அடையன்மின், நமது ஈசன் அடியரை! 
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் 
புடை புகாது, நீர், போற்றியே போமினே!

8.விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும், 
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே; 
அச்சம் எய்தி அருகு அணையாது, நீர், 
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!

9.இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய 
மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார், 
மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்- 
தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!

10.மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் 
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், 
ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் 
பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!

11.அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் 
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், 
சுருக்கெனது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் 
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.

திருச்சிற்றம்பலம் 

மன அழுத்தம், டென்சன் போன்ற அனைத்து வித மன நோய்கள் தீரவும்,மனம் அமைதி பெற்று நிலையான சந்தோஷத்தில் இருக்கவும் பாட வேண்டிய பதிகம்

மன அழுத்தம், டென்சன் போன்ற அனைத்து வித மன நோய்கள் தீரவும்,மனம் அமைதி பெற்று நிலையான சந்தோஷத்தில் இருக்கவும் பாட வேண்டிய பதிகம் 

திருவலிவலம்

திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்

குறிப்பு : (மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என்று எத்தனையோ நன்மை-தீமைகளை அனுபவிக்கிறார்கள். மனித மனதிற்கு துன்பம் வரும்போது மனம் கனமாகிறது. அந்த மன அழுத்தத்தால் ‘ரத்த அழுத்தம்’, ‘இதய நோய்கள்’, ‘மாரடைப்பு’ போன்றவை ஏற்படுகிறது. இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும்.

ஆம்! அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன.

அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றன என்கிறார்கள் சிவ அன்பர்கள் ..மேலும் இப்பதிகத்தை உள்ளன்போடு அனுதினமும் பாடினால் மன நிம்மதி பெற்று இறை அருள் பெறுவது உறுதி..)


திருவலிவலம்

இறைவர் திருப்பெயர்: இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.

திருச்சிற்றம்பலம் 

1.பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.
 
2.இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.
 
3.உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே. உரை
 
4.அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.
 
5.பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.
 
6.தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.
 
7.நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.
 
8.இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.
 
9.தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.
 
10.இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே. உரை
 
11.மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

திருச்சிற்றம்பலம் 
   

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...