வியாழன், 21 ஜூலை, 2011

குமர குருபரர் இயற்றிய சகலகலா வல்லி மாலை


சகலகலா வல்லி மாலை

 கல்வி, கேள்வி,தொழில் எதுவாக இருந்தாலும் சரி, அன்னை ஸ்ரீ சரஸ்வதி அருள் கடாக்ஷம் வேண்டும்...குமர குருபர ஸ்வாமிகள் இயற்றிய இந்த சகலகலா வல்லி மாலை எந்த துறையினராக இருந்தாலும் சரி, தினமும் படித்து விட்டு நம் முயற்சிகளில் மேற்கொண்டால் சரஸ்வதி தேவியின் அருளால் வெற்றி நிச்சயம்...



கட்டளைக் கலித்துறை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

*இப் பாடல்களை தினமும் படித்தால் கவி பாடும் திறனும்,பேச்சு வன்மையும் அதிகரிக்கும்.
அதுமட்டும் அல்லாமல் மாணவர்கள் அன்றாடம் பாடம் படிக்கும் முன்பு ஒரு தடவை படித்தால் படித்த பாடம் மறதி இல்லாமல் பரீட்சைகளில் தேர்வு பெற்று சிறந்த மதிப்பை பெறலாம் என்பது அனுபவப் பூர்வமான உண்மை........*

புதன், 20 ஜூலை, 2011

திருப்புகழ்

திருப்புகழமிர்தம் 

தேவாரம் போலவே திருப்புகழில் முருகபெருமான் அருணகிரியாருக்கு நிகழ்த்திய நிகழ்வு ஒன்றா , ரெண்டா, சொல்லவா வேண்டும்?
திருப்புகழிலும் முருகப்பெருமான் அருணகிரியார் மூலம் நமக்கு பக்தி நெறியை காட்டி முத்திக்கு வழி கூறுகிறார்....அதிலும் அடியேன் அறிந்த சில பாடல்களை வெளியிட விரும்புகிறேன்..அன்பர்கள் நாளும் ஓதி பலன் பெறுவோமாக !!!!!!!


திருப்புகழில் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு பெற

அருணகிரிநாதர்
                 
                               திருவேரகம்(சுவாமி மலை )

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்

     தவமுறை தியானம் வைக்க                        -  அறியாத

சடகசட மூட மட்டி பவ வினையிலேசனித்த
   
    தமியன் மிடியால் மயக்கம்                          -   முருவேனோ

கருணைபுரியாதிருப்ப என குறையி வேலைசெப்பு
   
   கயிலை மலை நாதர் பெற்ற                       -   குமரோனே

கடக புய மீதி ரத்ன மணியணி பொன் மாலை செச்சை

    கமழு மண மார்கடப்ப                                   -   மணிவோனே

தருணமிதை யாமிகுத்த கனமதுரு நீள்சவுக்ய

     சகல செல்வ யோகமிக்க                           -  பெருவாழ்வு

தகைமை சிவ ஞான முத்தி பர கதியு நீகொடுத்து
    
    உதவி புரிய வேணு  நெய்த்த                       -  வடிவேலா

அருணதள பாத பத்ம மது நிதமு மேதுதித்த 

    அரிய தமிழ் தானளித்த                              -   மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழனி மலை மீதுதித்த

    அழக திருவேரகத்தின்                               -  முருகோனே
                        

"வேலும் மயிலும் துணை"


திங்கள், 18 ஜூலை, 2011

தொடர் சனியின் தொல்லைகள் நீங்க....



சனிகிரகதினால் ஏற்படும் ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி மற்றும் கண்டச் சனியினால் பாதிப்புக்கு ஆளாயிருப்பவர்கள் இந்த பதிகத்தை தினம் தோறும் இடை விடாது படித்தால் சனிதிசையின் தாக்கம் முற்றிலும் நம்மை அண்டாது என்பதில் ஐயமில்லை..

திருச்சிற்றம்பலம்  


போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும்
பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.                             1

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.                               2


ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.                     3


புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.                 4


ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.                  5


திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.                               6


வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.                         7


சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.                            8


உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.                        9


மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.                        10


தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.                       11

                                     திருச்சிற்றம்பலம்


சனி, 16 ஜூலை, 2011

திருமூலர் அருளிய திருமந்திரம்..

திருச்சிற்றம்பலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்..

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
பொருள் விளக்கம்:
சிவபெருமனாரோடு நிகராக யாரும் இருப்பதில்லை.அவனோடு ஒப்பார் இந்த மனித பிறவியிலும் யாரும் இல்லை.இந்த பூமியைக் கடந்து ஞான விளக்காய் மின்னுபவர் அந்த முழுமுதற் கடவுள்  எம்பெருமானார் சிவபெருமானாரே!!!!
-------------------------------------------------------------------------------------------------------------
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
பொருள் விளக்கம்:
பெறலாஅனைத்து உயிர்களுக்கும் தந்தையாய் நந்தி எனும் பெயர் உடையவராய் தெவிட்டாத அமுதமுமாய் இருப்பவனுமாய்,வள்ளல் யாருக்கும் ஒப்பாகாத பெரிய வள்ளலும் ஊழி முதலிய அனைத்து உலகிற்கும் தலைவனாக இருப்பவனும்,இவ்வாறாக திகழக்கூடிய சிவபெருமானரை நாம் துதிக்க வேண்டும்.. அப்படி துதித்தால் அந்த ஈசனின் பேரருளை எளிதில் நாம் ம்..
                              திருச்சிற்றம்பலம்

வியாழன், 14 ஜூலை, 2011

பலன் தரும் பதிகங்கள்

நால்வர் அருளிய திருப் பதிகங்கள் மிகவும் பலன் தரக்கூடியது...
நாம் அனைவரும் அன்றாடம் அந்த திருப்பதிகங்களைப் படித்து பயன் பெறுவோமாக!!!
இப்பொழுது  இடர்களையும் பதிகம் என்கின்ற பதிகத்தைப் பார்ப்போம்..

                                     திருச்சிற்றம்பலம்
                                         திருநெடுங்களம்

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.  1

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 2

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 3

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே 4

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 5

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 6

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 7

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 8

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 9

வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 10

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
                11

இத் திருப்பதிகத்திற்கு இடர்களையும் பதிகம் எனும் ஒரு பெயருண்டு..
இப்பாடல்கள் நம் துன்பங்களை அறவே விரட்டிவிடும். நம் இடர்களையும் களையும் பதிகம் கூட..
அந்த அளவிற்கு மன அமைதியை தரும் பதிகம்..மேலும் தினமும் ஓதுவதால் வீடு மங்களம் பெருகும்...அன்பர்கள் நாளும் ஓதி இறையருள் பெறுவோமாக!!!
                                                  
                                                               திருச்சிற்றம்பலம்

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...