செவ்வாய், 28 மே, 2019

சிறு குழந்தைகளுக்கு வரும் இனம் புரியாத நோய்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும் பாட வேண்டிய தேவார பதிகம்

சிறு குழந்தைகளுக்கு வரும் இனம் புரியாத நோய்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும் பாட வேண்டிய தேவார பதிகம் 

(காசியில் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது,  அவிநாசியில் இறைவனை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.)
திருப்புக்கொளியூர் அவிநாசி 

குறிப்பு : (சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இத்தலம் சென்ற போது, ஒரு வீட்டில் மங்களவாத்திய கோஷமும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. இருமறை சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடச் சென்ற போது ஒருவனை முதலை விழுங்கிற்றென்றும், மற்றவனுக்கு உபநய சடங்கு வாத்திய கோஷத்தோடு நடக்கிறதென்றும், எதிர் வீட்டில் மாண்ட சிறுவனின் தாய், தன் மகனும் உயிரோடிருந்தல் அவனுக்கும் உபநயம் சிறப்பாக நடைபெறும் என நினைத்து அழுகிறாள் என்றும்,அங்குள்ள முதியோர் கூறக் கேட்டார்.இறந்த சிறுவனின் தாய் தந்தையர்  சுந்தரரை விழுந்து வணங்கினர்.
இரக்கம் மிக்க சுந்தரர் மடுவிற்குச் சென்று, அதில் முதலையை வரவழைத்து, வளர்ச்சி பெற்ற மறைச்சிறுவனை அது தரும்படியாகக் காலனுக்குக் கட்டளையிடுமாறு அவிநாசியப்பனுக்கு பதிகம் பாடி வேண்டுகோள் விடுத்தார்.உடனே முதலை மறைச்சிறுவனை மடுக்கரையிற் சேர்த்தது.அவனுக்கும் அப்பொழுதே உபநயம் செய்து வைத்தார்).

 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம் 

திருப்புக்கொளியூர் அவிநாசி 
குறிஞ்சி

திருச்சிற்றம்பலம் 

1.எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? 
“உற்றாய்” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்; 
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே 
பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!
 
2.வழி போவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி-நீ 
ஒழிவது அழகோ? சொல்லாய்! அருள், ஓங்கு சடையானே!- 
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை 
இழியாக் குளித்த மாணி-என்னைக் கிறி செய்ததே?
 
3.எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால், 
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை; 
பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே! 
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.
 
4.உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்! 
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! 
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!- 
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!
 
5.அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு; அது அன்றியும், 
சரம்-கோலை வாங்கி, வரிசிலை நாணியில் சந்தித்து, 
புரம் கோட எய்தாய்-புக்கொளியூர் அவிநாசியே! 
குரங்கு ஆடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.
 
6.“நாத்தானும் உனைப் பாடல் அன்று நவிலாது” எனா, 
“சோத்து!” என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்! 
பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே! 
கூத்தா!-உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!
 
7.மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி, மலைப்புறம் 
சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட, 
புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே! 
நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே

8.பேணாது ஒழிந்தேன், உன்னை அலால் பிற தேவரை; 
காணாது ஒழிந்தேன்; காட்டுதியேல் இன்னம் காண்பன், நான்;- 
பூண் நாண் அரவா! புக்கொளியூர் அவிநாசியே! 
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே!
 
9.நள்ளாறு, தெள்ளாறு, அரத்துறைவாய் எங்கள் நம்பனே 
வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பினாய்!- 
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை 
உள் ஆடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே?
 
10.நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை- 
போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை, 
கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய 
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.

திருச்சிற்றம்பலம் 

குருவருளை பெற பாட வேண்டிய தேவாரம்

குருவருளை பெற பாட வேண்டிய தேவாரம் 
(63 நாயன்மார்களை போற்றி பாடியருளிய அருமையான பதிகம் )
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய திருத்தொண்டத்தொகை

திருத்தொண்டத்தொகை 
கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம் 

1.தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு                                                                                             அடியேன்; 
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்                                                                          அடியார்க்கும் அடியேன்; 
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார்                                                                           விறல் மிண்டற்கு அடியேன்; 
அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
 
2.இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
 
3.மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும்,                                                                                             அடியேன்; 
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம்                                                                              அடியார்க்கும் அடியேன்; 
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால்                                                                                             எறிந்த, 
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .

4.திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும்,                                                                             பேயார்க்கும், அடியேன்; 
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு                                                                                             அடியேன்; 
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
 
5.வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால்                                                                                             பேணா 
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,                                                                                             அடியேன்; 
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
 
6.வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும்                                                                                             அடியேன்; 
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய                                                                   சிறுத்தொண்டற்கு அடியேன்; 
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன்                                                                        அடியார்க்கும் அடியேன்; 
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில்                                                                             அம்மானுக்கு ஆளே .

7.பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய                                                                    புகழ்ச்சோழற்கு அடியேன்; 
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை                                                                            அதிபத்தற்கு அடியேன்; 
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-                                                                            அடியார்க்கும் அடியேன்; 
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .

8.கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும்,                                                                                             அடியேன்; 
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான்                                                                    அடியார்க்கும் அடியேன்; 
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்                                                                          அம்மானுக்கு ஆளே .

9.கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-காடவர் கோன்-கழற்சிங்கன்                                                                            அடியார்க்கும் அடியேன்; 
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை தன்                                                                            அடியார்க்கும் அடியேன்; 
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்                                                                             துணைக்கும் அடியேன்; 
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
 
10.பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும்                                                                                             அடியேன்; 
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள்                                                                            எல்லார்க்கும் அடியேன்; 
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்; 
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
 
11.மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும்,                                                                                             அடியேன்; 
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப்                                                                            பாணனார்க்கு அடியேன்; 
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு                                                                             நாவலூர்க் கோன், 
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர்                                                                                             ஆவாரே .

திருச்சிற்றம்பலம் 
 

புதன், 22 மே, 2019

எம பயம் நீங்க பாட வேண்டிய அப்பர் பெருமான் தேவாரம்

எம பயம் நீங்க பாட வேண்டிய அப்பர் பெருமான் தேவாரம் 

 திருநீலக்குடி 

குறிப்பு :(மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி)

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

1.வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் 
செத்தபோது, செறியார் பிரிவதே; 
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை 
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

2.செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்- 
நெய் அது ஆடிய நீலக்குடி அரன், 
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம் 
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

3.ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- 
கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய 
நீற்றன் நீலக்குடி உடையான்; அடி 
போற்றினார் இடர் போக்கும் புனிதனே.

4.நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல் 
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் 
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்; 
காலனார் உயிர் போக்கிய காலனே.

5.நேச நீலக்குடி அரனே! எனா 
நீசராய், நெடுமால் செய்த மாயத்தால், 
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய், 
நாசம் ஆனார், திரிபுரநாதரே.

6.கொன்றை சூடியை, ழுகுன்றமகளொடும் 
நின்ற நீலக்குடி அரனே! எனீர்- 
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்; 
பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?

7.கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் 
ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால், 
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் 
நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!

8.அழகியோம்; இளையோம்ழு எனும் ஆசையால் 
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே, 
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் 
கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!

9.கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள் 
பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன் 
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்; 
சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.

10.தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் 
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால் 
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும் 
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.

திருச்சிற்றம்பலம் 


செவ்வாய், 21 மே, 2019

பகை தீர பாட வேண்டிய திருப்புகழ்

பகை தீர பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

சோமநாதன்மடம்

ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
     முழலுமநு ராக மோக ...... அநுபோகம்

உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
     வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்

கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
     மெனமொழியும் வீசு பாச ...... கனகோப

எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
     யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே

அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
     அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்

அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
     அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்

முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
     முகரசல ராசி வேக ...... முனிவோனே

மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
     முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

ஞாயிறு, 12 மே, 2019

3.வலிப்பு நோய் நீங்க பாட வேண்டிய சம்பந்தர் தேவாரம்

3.வலிப்பு நோய் நீங்க பாட  வேண்டிய சம்பந்தர் தேவாரம் (நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும்.)

குறிப்பு : (இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துளங்கி விளங்க எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள்.)

  திருப்பாச்சிலாச்சிராமம் - தக்கராகம் 

திருச்சிற்றம்பலம் 

1.துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
 
2.கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;
தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
   
3.வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
   
4.கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
அனம் மலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
   
5.மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?
   
6.நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர்; தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?
   
7.பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல்,
                                                             புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம்
                                                             இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ
                                                             இவர் சார்வே?
   
8.ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?
   
9.மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?
   
10.நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?
   
11.அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

திருச்சிற்றம்பலம் 
   

2.சொறி,சிரங்கு,படை ,போன்ற தோல் நோய் நீங்கவும்,அம்மை நோயினால் பாதிக்கப்படாமல் முகம் பொலிவு பெற்று இருக்கவும் பாட வேண்டிய சுந்தரர் தேவாரம்

2.சொறி,சிரங்கு,படை ,போன்ற தோல் நோய் நீங்கவும்,அம்மை நோயினால்  பாதிக்கப்படாமல் முகம் பொலிவு பெற்று இருக்கவும் பாட வேண்டிய சுந்தரர் தேவாரம் 

திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்

திருச்சிற்றம்பலம் 

1.மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை                                                                                 கொணர்ந்து எற்றும் 
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம்                                                                                            அடியார் 
சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்                                                                                            நாயேன் 
என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர்                                                                                 கெடுத்தானை .
 
2.கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி, 
மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி, 
ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் 
பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை .
 
3.கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன்                                                                                 கொண்டு, கூட்டு எய்தி, 
புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் 
செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்                                                                                           நாயேன் 
சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு                                                                                           அறுத்தானை .
 
4.பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்பலம்                                                                                                      கவர, 
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய் 
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் 
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .
 
5.பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி, 
இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து                                                                                                   இங்கே 
சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்                                                                                                நாயேன் 
ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .
 
6.புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும், நல் மலர் உந்தி, 
அகழும் மா அருங் கரை வளம் படப் பெருகி, ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி, 
திகழும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் 
இகழும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை .

7.வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும், வணக்கியும், மராமரம் பொருது, 
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், காம்(பு) பீலி சுமந்து, ஒளிர் நித்திலம் கை                                                                                                     போய், 
விரையும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்                                                                                                நாயேன் 
உரையும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, உலகு அறி பழவினை அற ஒழித்தானை .
 
8.ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள, 
காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி, 
தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் 
ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .
 
9.புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து                                                                                                     ஆர்ப்ப, 
இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு                                                                                                     எற்றி, 
கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் 
விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .
 
10.மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற 
அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன்,                                                                                                     ஆரூரன்- 
கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல் 
தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம்                                                                                             ஆள்பவரே .

 
திருச்சிற்றம்பலம் 

1.காய்ச்சல்,விஷ ஜுரம்,அம்மை போன்ற நோய்களாலும் மற்றும் பில்லி,சூனியம் போன்றவற்றால் பாதிக்க படாமலும் இருக்க பாட வேண்டிய சம்பந்தர் தேவாரம்

1.காய்ச்சல்,விஷ ஜுரம்,அம்மை போன்ற நோய்களாலும் மற்றும் பில்லி,சூனியம்  போன்றவற்றால் பாதிக்க படாமலும் இருக்க பாட வேண்டிய சம்பந்தர் தேவாரம் 


பொது - திருநீலகண்டம் 

திருச்சிற்றம்பலம்  

1.“அவ் வினைக்கு இவ் வினை ஆம்” என்று சொல்லும் அஃது
அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
   
2.காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று, இருபொழுதும்,
வினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
   
3.முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! 
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!
   
4.விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,
“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!
   
5.மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
   
6.மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
   
7.கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!
   
8.நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;
சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!
   
9.சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;
க்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!


10.பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,
இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.
   
திருச்சிற்றம்பலம் 

புதன், 8 மே, 2019

2.கண் சம்பந்த பட்ட நோய் நீங்கி தெளிவான பார்வை பெற பாட வேண்டிய திருப்புகழ்

கண் சம்பந்த பட்ட நோய் நீங்கி தெளிவான பார்வை பெற பாட வேண்டிய திருப்புகழ் 


குறிப்பு : (கண்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் உள்ளவர்கள், பிரதிமாதம் விசாக நட்சத்திரத்தன்று எண்கண் திருத்தலத்தில் சண்முகார்ச்சனை செய்து வழிபட கண்பார்வை முழுகுணம் பெறுவது இத்தலத்தின் குறிப்பிடத்தக்க அற்புதமாகும்). 

எண்கண்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
     சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்

தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
     சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
     சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே

சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
     செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
     அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
     டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா

இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
     எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.

"வேலும் மயிலும்  சேவலும் துணை"

1.கண் சம்பந்த பட்ட நோய் நீங்கவும்,தெளிவான பார்வை கிடைக்கவும் பாட வேண்டிய சம்பந்தர் பதிகம்

கண் சம்பந்த பட்ட நோய் நீங்கவும்,தெளிவான பார்வை கிடைக்கவும் பாட வேண்டிய சம்பந்தர் பதிகம் 

திருக்கண்ணார்கோயில் - குறிஞ்சி 

 திருச்சிற்றம்பலம் 
1.தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.
   
2.கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும்,
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி,
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.
   
3.“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம்” என்பர்
கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி,
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.
   
4.தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்,
மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.
   
5.மறு மாண் உரு ஆய் மற்று இணை இன்றி, வானோரைச்
செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன், தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே. உரை
   
6.விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும்
கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை,
நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே.
   
7.“முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி,
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு” என்பர் 
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே.
   
8.“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த,
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த
திருக்கண்ணார்” என்பார் சிவலோகம் சேர்வாரே.
   
9.செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.
   
10.தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும்
சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன்,
ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர்
ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே.
   
11.காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த
பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்-
நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்-
பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

 திருச்சிற்றம்பலம் 
   

வியாழன், 2 மே, 2019

கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளம் பெற பாட வேண்டிய பதிகம்

கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளம் பெற பாட வேண்டிய பதிகம் 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 

குறிப்பு : (   இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. )

இறைவர் :       சொர்ணகடேசுவரர்,வெண்ணெய்யப்பர்,                                 நெல்வெண்ணெய்நாதர்.                            
                                             
இறைவியார்     : பிருகந்நாயகி,நீலமலர்க்கண்ணி.


திருநெல்வெண்ணெய் - திருமுக்கால் - சாதாரி 

திருச்சிற்றம்பலம் 

1.நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.     

2.நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க்
கச்சு இள அரவு அசைத்தீரே;
கச்சு இள அரவு அசைத்தீர்! உமைக் காண்பவர்
அச்சமொடு அருவினை இலரே.      

3.நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே;
அரை விரி கோவணத்தீர்! உமை அலர்கொடு
உரை விரிப்போர் உயர்ந்தோரே.      

4.நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே;
ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே! 
 
5.நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே!
ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே!     
 
6.நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
பெற்றி கொள் பிறை நுதலீரே;
பெற்றி கொள் பிறைநுதலீர்! உமைப் பேணுதல்
கற்று அறிவோர்கள் தம் கடனே.  
 
7.நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே;
கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர்
உறைவதும் உம் அடிக்கீழே.     
 
8.நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
அரக்கனை அசைவு செய்தீரே;
அரக்கனை அசைவு செய்தீர்! உமை அன்பு செய்து
இருக்க வல்லார் இடர் இலரே.      

9.நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
இருவரை இடர்கள் செய்தீரே;
இருவரை இடர்கள் செய்தீர்! உமை இசைவொடு
பரவ வல்லார் பழி இலரே.      
 
10.நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத்தீரே;
சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.      
 
11.நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை,
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்,
சொல மல்குவார் துயர் இலரே.    

திருச்சிற்றம்பலம் 

 

நாளும் நாள் உயர்வு பெறுவதற்கு பாட வேண்டிய பதிகம்

நாளும் நாள் உயர்வு பெறுவதற்கு பாட வேண்டிய பதிகம் 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 

திருக்கானப்பேர்
 
திருச்சிற்றம்பலம் 

1.பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?     
 
2.நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.      
3.வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.      
 
4.நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.      
 
5.ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.     
 
6.பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீர்
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.      

7.மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.      
 
8.வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார் 
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.     

9.சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே     
 
10.உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.     
 
11.காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், 
                                                          பாவமே.     

திருச்சிற்றம்பலம் 
 

புதன், 1 மே, 2019

குழந்தைகள் குறைபாடு இன்றி முழு ஆரோக்யத்துடன் பிறக்கவும்,நல்ல உடல் நிலை,நோயற்ற வாழ்வு பெறவும் பாட வேண்டிய திருப்புகழ்

குழந்தைகள் குறைபாடு இன்றி முழு ஆரோக்யத்துடன்  பிறக்கவும்,நல்ல உடல் நிலை,நோயற்ற  வாழ்வு பெறவும் பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய பழனி திருப்புகழ் 

பழனி 

திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு ...... மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் ...... வரவேநின்

அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் ...... வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள ...... மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை ...... விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் ...... மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

நோய் நொடியின்றி வாழ பாட வேண்டிய திருப்புகழ்

நோய் நொடியின்றி வாழ பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய பழனி திருப்புகழ் 

பழனி 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை
     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...