புதன், 23 ஜனவரி, 2019

(2) துயரங்களை நீக்கி நிம்மதியாக வாழ பாட வேண்டிய பதிகம்

சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய 7ம் திருமுறை 

திருஆவடுதுறை 

திருச்சிற்றம்பலம் 

1கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

2மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே!
கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்;
தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
அண்ணலே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
 
3ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்!
முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே!
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள்
அப்பனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
 
4கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே!
மதி இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் மயங்கினேன்; மணியே! மணவாளா!
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே! திரு ஆவடுதுறையுள்
அதிபனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

5வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே!
வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த
இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள்
அந்தணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

6குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக் காது உடையானே!
உறவு இலேன், உனை அன்றி; மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே?
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர்ச் செம்பொனே! திரு ஆவடுதுறையுள்
அறவனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே!
மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா!
செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள்
ஐயனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

8கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே!
பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ!
தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள்
ஆதியே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

9வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே!
ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே!
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
ஆனையே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

10வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த
இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.

  

(1) துயரங்களை நீக்கி நிம்மதியாக வாழ பாட வேண்டிய பதிகம்

சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய 7 ம் திருமுறை 
(முதல் பதிகம்) 
வட திருமுல்லைவாயில் 

திருச்சிற்றம்பலம் 


1“திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
  
2கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண,
ஆடிய அழகா! அருமறைப் பொருளே! “அங்கணா! எங்கு உற்றாய்?” என்று
தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!.
3விண் பணிந்து ஏத்தும் வேதியா! மாதர் வெருவிட, வேழம் அன்று உரித்தாய்!
செண்பகச் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! தேவர் தம் அரசே!
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய்! சங்கிலிக்கா என் கண் கொண்ட
பண்ப! நின் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
  
4பொன் நலம் கழனிப் புது விரை மருவி, பொறி வரிவண்டு இசை பாட,
அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட, அள்ளல்
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால்
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
5சந்தனவேரும், கார் அகில் குறடும், தண் மயில் பீலியும், கரியின்
தந்தமும், தரளக் குவைகளும், பவளக்-கொடிகளும், சுமந்து கொண்டு உந்தி
வந்து இழி பாலி வடகரை முல்லை-வாயிலாய்! மாசு இலா மணியே!
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
  
6மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .


7மணி கெழு செவ்வாய், வெண்நகை, கரிய வார்குழல், மா மயில் சாயல்,
அணி கெழு கொங்கை, அம் கயல் கண்ணார் அரு நடம் ஆடல் அறாத
திணி பொழில் தழுவு திரு முல்லை வாயில் செல்வனே! எல்லியும் பகலும்
பணி அது செய்வேன் படு துயர் களையாய்; பாசுபதா! பரஞ்சுடரே! .


8நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்-தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
  
9மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை, மாளக் காலினால் ஆர் உயிர் செகுத்த
சிட்டனே! செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே! செழுமறை பகர்ந்த
பட்டனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .


10சொல்ல(அ)ரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு,
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு, அருளிய இறைவனே! என்றும்
நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே! நரை விடை ஏறீ!
பல் கலைப் பொருளே! படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
11விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை,
திரை தரு புனல் சூழ் திரு முல்லை வாயில் செல்வனை, நாவல் ஆரூரன்
உரை தரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள்,
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர், விண்ணவர்க்கு அரசே .


  திருச்சிற்றம்பலம் 

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...