வியாழன், 20 ஜூன், 2019

2.கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய பதிகம்

2.கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய பதிகம் 

திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் 

இத்தல இறைவர் - எழுத்தறிநாதர்(அட்சரபுரீஸ்வரர்) என்று அழைக்கபடுகிறார் 
                  இறைவி -  நித்தியகல்யாணி, சுகந்த குந்தளாம்பாள் என்று அழைக்கபடுகிறார்கள் ..

குறிப்பு:

அகஸ்திய முனிவர் இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

***குழந்தைகளுக்கு சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்யாரம்பம் செய்ய இத்தலத்திற்கு பக்தர்கள் வருகிறார்கள். இறைவன் சந்நிதி முன் நெல்லைப் பரப்பி அதில் எழுதுவதைத் தொடங்குவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.***

மேலும் கல்வி மற்றும் கேள்விகளில் சிறந்து விளங்க இந்த பதிகத்தை பாராயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பது திண்ணம்.


திருஇன்னம்பர் - திருமுக்கால் - சாதாரி 

திருச்சிற்றம்பலம் 

1.எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.      
 
2.யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே;
தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.      
 
3.இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே;
வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே.      
 
4.இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே;
கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே.      
 
5.இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒரு கூறு உடையீரே;
உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர், அன்பே.      
 
6.எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அருஞ் சடைமுடியீரே;
தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே.      
 
7.எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே;
நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.      
 
8.ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.      

9.இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே;
அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே.      
 
10.ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே;
தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்
ஆர் துயர், அருவினை, இலரே.      
 
11.ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.      

திருச்சிற்றம்பலம் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...