சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய 7 ம் திருமுறை
(முதல் பதிகம்)
வட திருமுல்லைவாயில்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
(முதல் பதிகம்)
வட திருமுல்லைவாயில்
திருச்சிற்றம்பலம்
1 | “திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்; முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
2 | கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண, ஆடிய அழகா! அருமறைப் பொருளே! “அங்கணா! எங்கு உற்றாய்?” என்று தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!. |
3 | விண் பணிந்து ஏத்தும் வேதியா! மாதர் வெருவிட, வேழம் அன்று உரித்தாய்! செண்பகச் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! தேவர் தம் அரசே! தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய்! சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப! நின் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
4 | பொன் நலம் கழனிப் புது விரை மருவி, பொறி வரிவண்டு இசை பாட, அம் நலம் கமலத் தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட, அள்ளல் செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால் பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
5 | சந்தனவேரும், கார் அகில் குறடும், தண் மயில் பீலியும், கரியின் தந்தமும், தரளக் குவைகளும், பவளக்-கொடிகளும், சுமந்து கொண்டு உந்தி வந்து இழி பாலி வடகரை முல்லை-வாயிலாய்! மாசு இலா மணியே! பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
6 | மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக் குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்; செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன் பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
7 | மணி கெழு செவ்வாய், வெண்நகை, கரிய வார்குழல், மா மயில் சாயல், அணி கெழு கொங்கை, அம் கயல் கண்ணார் அரு நடம் ஆடல் அறாத திணி பொழில் தழுவு திரு முல்லை வாயில் செல்வனே! எல்லியும் பகலும் பணி அது செய்வேன் படு துயர் களையாய்; பாசுபதா! பரஞ்சுடரே! . |
8 | நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா! செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்-தேடி, யான் திரிதர்வேன், கண்ட பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
9 | மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே கட்டுவான் வந்த காலனை, மாளக் காலினால் ஆர் உயிர் செகுத்த சிட்டனே! செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே! செழுமறை பகர்ந்த பட்டனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
10 | சொல்ல(அ)ரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு, எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு, அருளிய இறைவனே! என்றும் நல்லவர் பரவும் திரு முல்லை வாயில் நாதனே! நரை விடை ஏறீ! பல் கலைப் பொருளே! படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
11 | விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை, திரை தரு புனல் சூழ் திரு முல்லை வாயில் செல்வனை, நாவல் ஆரூரன் உரை தரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள், நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர், விண்ணவர்க்கு அரசே . |
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக