புதன், 23 ஜனவரி, 2019

(2) துயரங்களை நீக்கி நிம்மதியாக வாழ பாட வேண்டிய பதிகம்

சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய 7ம் திருமுறை 

திருஆவடுதுறை 

திருச்சிற்றம்பலம் 

1கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

2மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே!
கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்;
தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
அண்ணலே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
 
3ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்!
முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே!
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள்
அப்பனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
 
4கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே!
மதி இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் மயங்கினேன்; மணியே! மணவாளா!
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே! திரு ஆவடுதுறையுள்
அதிபனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

5வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே!
வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த
இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள்
அந்தணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

6குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக் காது உடையானே!
உறவு இலேன், உனை அன்றி; மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே?
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர்ச் செம்பொனே! திரு ஆவடுதுறையுள்
அறவனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே!
மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா!
செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள்
ஐயனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

8கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே!
பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ!
தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள்
ஆதியே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

9வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே!
ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே!
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
ஆனையே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

10வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த
இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...