செவ்வாய், 28 மே, 2019

சிறு குழந்தைகளுக்கு வரும் இனம் புரியாத நோய்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும் பாட வேண்டிய தேவார பதிகம்

சிறு குழந்தைகளுக்கு வரும் இனம் புரியாத நோய்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும் பாட வேண்டிய தேவார பதிகம் 

(காசியில் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது,  அவிநாசியில் இறைவனை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.)
திருப்புக்கொளியூர் அவிநாசி 

குறிப்பு : (சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இத்தலம் சென்ற போது, ஒரு வீட்டில் மங்களவாத்திய கோஷமும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. இருமறை சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடச் சென்ற போது ஒருவனை முதலை விழுங்கிற்றென்றும், மற்றவனுக்கு உபநய சடங்கு வாத்திய கோஷத்தோடு நடக்கிறதென்றும், எதிர் வீட்டில் மாண்ட சிறுவனின் தாய், தன் மகனும் உயிரோடிருந்தல் அவனுக்கும் உபநயம் சிறப்பாக நடைபெறும் என நினைத்து அழுகிறாள் என்றும்,அங்குள்ள முதியோர் கூறக் கேட்டார்.இறந்த சிறுவனின் தாய் தந்தையர்  சுந்தரரை விழுந்து வணங்கினர்.
இரக்கம் மிக்க சுந்தரர் மடுவிற்குச் சென்று, அதில் முதலையை வரவழைத்து, வளர்ச்சி பெற்ற மறைச்சிறுவனை அது தரும்படியாகக் காலனுக்குக் கட்டளையிடுமாறு அவிநாசியப்பனுக்கு பதிகம் பாடி வேண்டுகோள் விடுத்தார்.உடனே முதலை மறைச்சிறுவனை மடுக்கரையிற் சேர்த்தது.அவனுக்கும் அப்பொழுதே உபநயம் செய்து வைத்தார்).

 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம் 

திருப்புக்கொளியூர் அவிநாசி 
குறிஞ்சி

திருச்சிற்றம்பலம் 

1.எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? 
“உற்றாய்” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்; 
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே 
பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!
 
2.வழி போவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி-நீ 
ஒழிவது அழகோ? சொல்லாய்! அருள், ஓங்கு சடையானே!- 
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை 
இழியாக் குளித்த மாணி-என்னைக் கிறி செய்ததே?
 
3.எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால், 
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை; 
பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே! 
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.
 
4.உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்! 
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! 
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!- 
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!
 
5.அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு; அது அன்றியும், 
சரம்-கோலை வாங்கி, வரிசிலை நாணியில் சந்தித்து, 
புரம் கோட எய்தாய்-புக்கொளியூர் அவிநாசியே! 
குரங்கு ஆடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.
 
6.“நாத்தானும் உனைப் பாடல் அன்று நவிலாது” எனா, 
“சோத்து!” என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்! 
பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே! 
கூத்தா!-உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!
 
7.மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி, மலைப்புறம் 
சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட, 
புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே! 
நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே

8.பேணாது ஒழிந்தேன், உன்னை அலால் பிற தேவரை; 
காணாது ஒழிந்தேன்; காட்டுதியேல் இன்னம் காண்பன், நான்;- 
பூண் நாண் அரவா! புக்கொளியூர் அவிநாசியே! 
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே!
 
9.நள்ளாறு, தெள்ளாறு, அரத்துறைவாய் எங்கள் நம்பனே 
வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பினாய்!- 
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை 
உள் ஆடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே?
 
10.நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை- 
போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை, 
கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய 
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.

திருச்சிற்றம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...