வியாழன், 20 ஜூன், 2019

வறுமை நீங்கி நிறைந்த செல்வம் பெற பாட வேண்டிய சுந்தரர் தேவாரம்

நிறைந்த செல்வம் பெருக பெற பாட வேண்டிய சுந்தரர் தேவாரம் 

 சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7ம் திருமுறை பதிகம் 

 திருப்பாச்சிலாச்சிராமம் 

குறிப்பு : ( இந்த ஆலயத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. அதாவது சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த திருத்தலம் இது. சிவத்தல யாத்திரையாக இத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு இத்தல ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார்.

இப்போது சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே! ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ?’ என்று எண்ணினார்.

சுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, ‘இந்த பொன் தரமானது தான்’ என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு ‘மாற்றுரைவரதர்’ என்று திருநாமம் வந்ததாம்.)


திருச்சிற்றம்பலம் 

1.வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி 
உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்; 
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் 
பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
2.“அன்னையே!” என்னேன்; “அத்தனே!” என்னேன்; “அடிகளே அமையும்” என்று                                                                                          இருந்தேன்; 
என்னையும், “ஒருவன் உளன்” என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்; 
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் 
பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
3.உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; “உள்ளமே அமையும்” என்று இருந்தேன்; 
செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர், 
அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், 
பெற்ற போது உகந்து, பெறாவிடில் இகழில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
4.நாச் சில பேசி, “நமர் பிறர்” என்று, “நன்று தீது” என்கிலர்; மற்று ஓர் 
பூச்சு இலை; நெஞ்சே! பொன் விளை கழனிப் புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கைப் 
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர் தாம் பலரையும் ஆட்கொள்வர்; பரிந்து ஓர் 
பேச்சு இலர்; ஒன்றைத் தர இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
5.வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும், 
“புரிந்த அந் நாளே புகழ் தக்க; அடிமை போகும் நாள் வீழும் நாள்” ஆகிப் 
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், 
பிரிந்து இறைப் போதில் பேர்வதே ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
6.செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்; “தீவினை செற்றிடும்” என்று 
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்; ஆவதும் அறிவர், எம் அடிகள்; 
படைத்தலைச் சூலம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், 
பிடித்த வெண்நீறே பூசுவது ஆனால், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
7.கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்; 
மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்; 
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்; 
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

8.நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன்; நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்; 
கணம் படிந்து ஏத்தி, கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்; 
பணம் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், 
பிணம் படு காட்டில் ஆடுவது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
9.குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே! குற்றேவல் நாள்தொறும் செய்வான்; 
இழைத்த நாள் கடவார்; அன்பிலரேனும், “எம்பெருமான்!” என்று எப்போதும் 
அழைத்தவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம், யாது சொன்னாலும், 
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
10.துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில், 
மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்; 
பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர், 
பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
11.ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்; 
உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்; 
அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள், 
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
 
12.ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; “எம்பெருமான்!” என்று எப்போதும் 
பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள் 
வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன், 
பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

திருச்சிற்றம்பலம் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...