1) கல்வியில் சிறந்து விளங்கி அதிக மதிப்பெண் பெற ஓத வேண்டிய முதல் பதிகம் !!!!!
இங்கு நான் கல்வியில் சிறந்து விளங்க பாட வேண்டிய சம்பந்தர் மற்றும் அப்பர் பதிகம்கள் பதிவிட்டுள்ளேன் .கீழே நாம் காண இருப்பது சம்பந்த பெருமானின் இன்னம்பர் பதிகம் ஆகும். அன்பர்கள் படித்து பயன் பெறுக.மேலும் அடுத்த பதிவில் அப்பர் பெருமான் அருளிய இன்னம்பர் பதிகம் கொடுத்து உள்ளேன் .அதையும் படித்து எம்பெருமான் எழுத்தறிநாதர் திருவருளுக்கு பாத்திரமாவோமாக !!!!!!!!!!!!!!!!!
இறைவர் : எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்
இறைவியார் : கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)
குறிப்பு :(ஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும். கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.
பேச்சுத்திறமை இல்லாதவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் இருக்கிறது (அடியேன் அதற்கு சான்று )
திருஇன்னம்பர் - திருமுக்கால் - சாதாரி
திருஞானசம்பந்தர் பதிகம்
திருச்சிற்றம்பலம்
1.எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.
2.யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே;
தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.
3.இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே;
வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே.
4.இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே;
கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே.
5.இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒரு கூறு உடையீரே;
உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர், அன்பே.
6.எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அருஞ் சடைமுடியீரே;
தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே.
7.எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே;
நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.
8.ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.
9.இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே;
அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே.
10.ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே;
தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்
ஆர் துயர், அருவினை, இலரே.
11.ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.
திருச்சிற்றம்பலம்
தல வரலாறு: சோழமன்னரிடம் கணக்கராக பணியாற்றிவர் சுதன்மன் என்ற சிவபக்தர். அவரை பிடிக்காதவர்கள் அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் மன்னரிடம் கூறி கோள் மூட்டினர். இதனால் மன்னருக்கு சுதன்மர் எழுதிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதன்மரை அழைத்து உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையாக உத்தரவிட்டான்.
சிவபக்தரான சுதன்மர், உரிய கணக்கு காட்டியும் மன்னன் நம்பவில்லையே! வீண்பழி ஏற்படுகிறதே! என்று சிவனிடம் வருந்தி முறையிட்டார். உடனே, சிவன் சுதன்மரின் வடிவத்தில் மன்னரிடம் சென்று கணக்கை காட்டி மன்னனின் சந்தேகத்தினை நீக்கிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் சுதன்மர் கணக்குடன் மன்னரை சந்திக்க சென்றார். அப்போது மன்னன், சுதன்மரே! இப்போதுதான் கணக்குக் காட்டிச்சென்றீர்! மீண்டும் ஏற்கனவே காட்டிய கணக்கை ஏன் காட்ட வருகிறீர் என மன்னன் கேட்டான்.
அப்போது தான் இப்போதுதான் வருவதாகவும், இதுவரை இறைவன் சன்னதியில் இருந்ததையும் சுதன்மர் சொல்ல, வந்தது இறைவனே என்று மன்னன் உணர்கிறார். சுதன்மரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு சிவனுக்கு பெரிய கோவிலையும் எழுப்பினான்.
சுதன்மர் வழிபட்ட ஈசன் சுயம்பு லிங்கம். எனவே தான் தோன்றீசர் என்று வழங்கப்பட்டது. இறைவன் சுதன்மர் வடிவில் வந்து கணக்கு காட்டியமையால் எழுத்தறிநாதர், அட்சரபுரிஸ்வரர் என்ற நாமங்களும் ஏற்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக