மனக்கவலை களையவும், பசிப்பிணி தீரவும் பாட வேண்டிய பதிகம்
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய பதிகம் [7- ம் திருமுறை]
இறைவர் : விருந்திட்டஈசுவரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர்.
இறைவியார் : அஞ்சனாட்சியம்மை.
குறிப்பு : சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாய் ஓரி ' என்னும் இந்த பதிகம் பாடிப் போற்றினார்.
திருச்சிற்றம்பலம்
1.முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரிகொண்டு ஆடல் முயல்வானே,
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா,
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால், அடியார் கவலாரே,
அதுவே ஆமாறு இதுவோ, கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
2.கச்சுஏர் அரவுஒன்று அரையில் அசைத்துக்
கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று
உச்சம் போதா ஊர்ஊர் திரியக்
கண்டால், அடியார் உருகாரே,
இச்சை அறியோம் எங்கள் பெருமான்,
ஏழேழ் பிறப்பும் எனைஆள்வாய்,
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
3.சாலக் கோயில் உளநின் கோயில்,
அவைஎன் தலைமேல் கொண்டாடி,
மாலைத் தீர்ந்தேன், வினையும் துரந்தேன்,
வானோர் அறியா நெறியானே,
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயில் கல்லால் நிழற்கீழ்
அறங்கள் உரைத்த அம்மானே.
4.விடையும் கொடியும் சடையும் உடையாய்,
மின்னேர் உருவத்து ஒளியானே,
கடையும் புடைசூழ் மணிமண் டபமும்
கன்னி மாடம் கலந்துஎங்கும்,
புடையும் பொழிலும் புனலும் தழுவி,
பூமேல் திருமா மகள்புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
5.மேலை விதியே, விதியின் பயனே,
விரவார் புரமூன்று எரிசெய்தாய்,
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய், கறைக்கண்டா,
மாலை மதியே, மலைமேல் மருந்தே,
மறவேன் அடியேன், வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
6.பிறவாய், இறவாய், பேணாய், மூவாய்,
பெற்றம் ஏறிப் பேய்சூழ்தல்
துறவாய், மறவாய், சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு நடம்ஆடி,
ஒறுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக்
கண்டால், அடியார் உருகாரே,
அறவே ஒழியாய், கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
7.பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே,
மெய்யே, எங்கள் பெருமான், உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்,
மைஆர் தடங்கண் மடந்தை பங்கா,
கங்கார் மதியம் சடைவைத்த
ஐயா, செய்யாய், வெளியாய், கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
8.ஊனைப் பெருக்கி உன்னை நினையாது
ஒழிந்தேன், செடியேன், உணர்வில்லேன்,
கானக் கொன்றை கமழ மலரும்
கடிநாறு உடையாய், கச்சூராய்,
மானைப் புரையும் மடமென் னோக்கி
மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய், ஞானக் கண்ணாய்,
ஆலக் கோயில் அம்மானே.
9.காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலர்இட்டு உனைஏத்தி,
ஆதல் செய்யும் அடியார் இருக்க,
ஐயங் கொள்ளல் அழகிதே,
ஓதக் கண்டேன், உன்னை மறவேன்,
உமையாள் கணவா, எனைஆள்வாய்,
ஆதற் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
10.அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை,
உன்னம் உன்னும் மனத்து ஆரூரன்,
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன், வயல்நா வலர்கோன்,
செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவர்என் தலைமேல் பயில்வாரே.
திருச்சிற்றம்பலம்
குறிப்பு : இப்பாடலின் 5 வது பதிகத்தில்
மேலை விதியே, விதியின் பயனே,
விரவார் புரமூன்று எரிசெய்தாய்,
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய், கறைக்கண்டா,
மாலை மதியே, மலைமேல் மருந்தே,
மறவேன் அடியேன், வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
என்று சுந்தரர் குறிப்பிடுகிறார் .
சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமை திருக்கச்சூருக்கு உண்டு.அதனால் விருந்திட்ட ஈஸ்வரர் என்ற பெயரும் மூலவருக்கு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக