நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் தீர பாட வேண்டிய பதிகம்...
பாவநாசத் திருப்பதிகம் அப்பர் பெருமான் அருளியது
திருச்சிற்றம்பலம்
1.பற்று அற்றார் சேர் பழம் பதியை, பாசூர் நிலாய பவளத்தை,
சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்கு அரிய திரு உருவை,
வெற்றியூரில் விரிசுடரை, விமலர்கோனை, திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.
2.ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.
3.மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை,
அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை,
விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை,
நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.
4.புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை,
உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை,
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை,
அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே.
5.கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை,
ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை,
பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை,
சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.
6.மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை,
கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை,
பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய
திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.
7.எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை,
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
8.மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
9.சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை,
ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை,
நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.
10.புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை,
வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை,
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை,
வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.
11.முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை,
சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி,
“எந்தை பெம்மான், என் எம்மான்” என்பார் பாவம் நாசமே.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக