திங்கள், 3 ஜூலை, 2023

பழைய வினைகள், தொடரும் வல்வினை, அத்தனையும் தீர திருவாரூர் பெருமான் திருவடியை சரண் புகுந்து இந்த பதிகம் பாடுவோமாக !!!

 பழைய வினைகள், தொடரும் வல்வினை, அத்தனையும் தீர திருவாரூர் பெருமான்  திருவடியை சரண் புகுந்து இந்த பதிகம் பாடுவோமாக !!!


சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7 ம் திருமுறை 

திருஆரூர்

புறநீர்மை


                            திருச்சிற்றம்பலம் 

1.அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,

முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,

சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,

எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?

 

2. நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்

துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து,

தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு,

என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?

 

3. முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்

பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய,

செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,

என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?

 

4. நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக்

கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய,

செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,

எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?

 

5. கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்;

சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய்

அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு-

இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?

 

6 . சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம்,

வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள்

ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு-

ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே;

 

7. கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த

வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச்

செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு-

என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே?

 

8. ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப்

பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,-

சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு-

ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே?

 

9. மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல்

அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்-

திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு-

எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?


10. மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை

நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன்

பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார்

பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.

                        திருச்சிற்றம்பலம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...